இலாசர் இறத்தல்
1 பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார்.
அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்.
2 இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித்
தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர்.
நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். [1]
3 இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி,
"ஆண்டவரே, உன் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று தெரிவித்தார்கள்.
4 அவர் இதைக் கேட்டு, "இந்நோய் சாவில் போய் முடியாது.
கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான்.
இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்"
என்றார்.
5 மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும்
இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.
6 இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு,
தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.
7 பின்னர் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்"
என்று கூறினார்.
8 அவருடைய சீடர்கள் அவரிடம்,
"ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்;
மீண்டும் அங்குப் போகிறீரா?" என்று கேட்டார்கள்.
9 இயேசு மறுமொழியாக, "பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா?
பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது.
[2]
10 ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை"
என்றார்.
11 இவ்வாறு கூறியபின், "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்;
நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்"
என்றார்.
12 அவருடைய சீடர் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்" என்றனர்.
13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார்.
வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். [3]
14 அப்போது இயேசு அவர்களிடம்,
"இலாசர் இறந்து விட்டான்"
என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,
15 "நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்;
ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது.
அவனிடம் போவோம், வாருங்கள்"
என்றார்.
16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம்,
"நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார்.
நம்புவோர் வாழ்வர்
17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து
ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.
18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில்
ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் [4] தொலையில் இருந்தது.
19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு
ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.
20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும்
மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
21 மார்த்தா இயேசுவை நோக்கி,
"ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.
22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம்
அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
23 இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்"
என்றார்.
24 மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது
அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார்.
25 இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.
இதை நீ நம்புகிறாயா?"
என்று கேட்டார். '
27 மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்!
நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.
இயேசு கண்ணீர் விடுதல்
28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்;
அவரிடம், "போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய்ச் சொன்னார்.
29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.
30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை.
மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.
31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள்
அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு,
அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.
32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து,
அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து,
"ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றார்.
33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது
இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,
34 "அவனை எங்கே வைத்தீர்கள்?"
என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள்.
35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.
36 அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!" என்று பேசிக் கொண்டார்கள்.
37 ஆனால் அவர்களுள் சிலர்,
"பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர்
இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?" என்று கேட்டனர்.
இலாசர் உயிர்பெறுதல்
38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார்.
அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.
39 "கல்லை அகற்றி விடுங்கள்"
என்றார் இயேசு.
இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம்,
"ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!" என்றார்.
40 இயேசு அவரிடம்,
"நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என
நான் உன்னிடம் கூறவில்லையா?"
என்று கேட்டார்.
41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள்.
இயேசு அண்ணாந்து பார்த்து,
"தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும்.
எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று
சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்"
என்று கூறினார்.
43 இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில்,
"இலாசரே, வெளியே வா"
என்று கூப்பிட்டார்.
44 இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார்.
அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன.
"கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்"
என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம்
(மத் 26:1-5; மாற் 14:1,2; லூக் 22:1,2)
45 மரியாவிடம் வந்திருந்த யூதர் இயேசு செய்வதைக் கண்டு அவரை நம்பினர்.
46 ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்வதைத் தெரிவித்தனர். [5]
47 தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி,
"இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்?
48 இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர்.
அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும்
நம் இனத்தையும் அழித்து விடுவார்களே!" என்று பேசிக் கொண்டனர்.
49 கயபா என்பவர் அவர்களுள் ஒருவர்.
அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார்.
அவர் அவர்களிடம், "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. [6]
50 இனம் முழுவதும் அழிந்து போவதைவிட
ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை
நீங்கள் உணரவில்லை" என்று சொன்னார்.
51 இதை அவர் தாமாகச் சொல்லவில்லை.
அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால்,
இயேசு தம் இனத்திற்காவும்,
52 தம் இனத்திற்காக மட்டுமின்றி,
சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன்
அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.
53 ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள். [7]
54 அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை.
அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்;
அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
7. இறுதிப் பாஸ்கா விழா
55 யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.
விழாவுக்குமுன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப்
பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.
56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள்.
"அவர் திருவிழாவுக்கு வரவே மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று
கோவிலில் நின்றுகொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.
57 ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும்
இயேசுவைப் பிடிக்க எண்ணி
அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால்
தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.- குறிப்புகள்
[1] 11:1,2 - லூக் 19:38,39; யோவா 12:1-8.
[2] 11:9 - யோவா 8:12.
[3] 11:13 - மத் 9:24.
[4] 11:18 - பதினைந்து ஸ்தாதியம் என்பது கிரேக்க பாடம்.
[5] 11:46 - மத் 26:3,4; லூக் 22:2; திப 4:16.
[6] 11:49 - லூக் 3:2; யோவா 18:13.
[7] 11:53 - மத் 12:14.