6. கிறிஸ்தவ வாழ்வு
1 சகோதர சகோதரிகளே,
கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்:
கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.
2 இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள்.
மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக!
அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள்.
எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும்
உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். [1]
3 இறையருள் பெற்றவன் என்னும் முறையில்
உங்களுள் ஒவ்வொருவருக்கும் நான் கூறுவது:
உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது;
அவரவருக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த
நம்பிக்கையின் அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் தம்மை மதித்துக் கொள்ளட்டும்.
4 ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள;
அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை.
5 அது போலவே, நாம் பலராயிருந்தாலும்
கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்;
ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம். [2]
6 ஆயினும், நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப
வெவ்வேறு அருள்கொடைகளைப் பெற்றுள்ளோம்.
இறைவாக்குரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால்
நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும்.
7 தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால்
அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
8 கற்றுக் கொடுப்போர் கற்றுக் கொடுப்பதிலும்,
ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும்,
தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும்,
தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும்,
இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முகமலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும்
தாம் பெற்ற அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும். [3]
கிறிஸ்தவ வாழ்க்கைக்குரிய ஒழுங்குகள்
9 உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக!
தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள்.
10 உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர்
உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்;
பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்.
11 விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும்
ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்.
12 எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்;
துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்;
இறைவேண்டலில் நிலைத்திருங்கள்.
13 வறுமையுற்ற இறைமக்களோடு
உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்;
விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.
14 உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்;
ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம். [4]
15 மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்.
16 நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்;
உயர்வுமனப்பான்மை கொள்ளாமல்
தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.
நீங்கள் உங்களையே அறிவாளிகளெனக் கருதிப்
பெருமிதம் கொள்ள வேண்டாம். [5]
17 தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்;
எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள். [6]
18 இயலுமானால், உங்களால் முடிந்தவரை
எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள். [7]
19 அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்;
அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள்.
ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு,
"பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன"
என்கிறார் ஆண்டவர்.
20 நீயோ,
"உன் எதிரி பசியாய் இருந்தால், அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந்தால், அவன் குடிக்கக் கொடு. இவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்." [8]
21 தீமை உங்களை வெல்லவிடாதீர்கள்,
நன்மையால் தீமையை வெல்லுங்கள்!- குறிப்புகள்
[1] 12:2 - எபே 4:23.
[2] 12:4,5 - 1 கொரி 12:12.
[3] 12:6-8 - 1 கொரி 12:4-11.
[4] 12:14 - மத் 5:44; லூக் 6:28.
[5] 12:16 - நீமொ 3:7; 26:12.
[6] 12:17 - நீமொ 20:22.
[7] 12:18 - மாற் 9:50; இச 12:19; 32:35.
[8] 12:20 - நீமொ 25:21.