1 நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும்
அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும்
ஓசையிடும் தாளமும் போலாவேன்.
2 இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும்,
மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும்,
அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,
மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும்
என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. [1]
3 என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும்
என் உடலையே சுட்டெரிப்பதற்கென [2] ஒப்புவித்தாலும்
என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
4 அன்பு பொறுமையுள்ளது;
நன்மை செய்யும்;
பொறாமைப்படாது;
தற்புகழ்ச்சி கொள்ளாது;
இறுமாப்பு அடையாது.
5 அன்பு இழிவானதைச் செய்யாது;
தன்னலம் நாடாது;
எரிச்சலுக்கு இடம் கொடாது;
தீங்கு நினையாது.
6 அன்பு தீவினையில் மகிழ்வுறாது;
மாறாக உண்மையில் அது மகிழும்.
7 அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்;
அனைத்தையும் நம்பும்;
அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்;
அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.
8 இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்;
பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்;
அறிவும் அழிந்துபோம்.
ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.
9 ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது;
நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம்.
10 நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.
11 நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்;
குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்;
குழந்தையைப்போல எண்ணினேன்.
நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.
12 ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல்
மங்கலாய்க் காண்கிறோம்;
ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம்.
இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்;
அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். [3]
13 ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது.- குறிப்புகள்
[1] 13:2 - மத் 17:20; 21:21; மாற் 11:23.
[2] 13:3 - "பெருமையடைவதற்கென" எனப் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகின்றது.
[3] 13:12 - 1 யோவா 3:2.