4. அறிவுரைப் பகுதி
கிறிஸ்தவரின் உரிமை வாழ்வு
1 கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து
நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில்
நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை
உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
2 பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்:
நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால்
உங்களுக்குப் பயனே இல்லை.
3 விருத்தசேதனம்
செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் திருச்சட்டம்
முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை நான்
மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறேன்.
4 திருச்சட்டம்
சார்ந்த செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக முயலும் நீங்கள்
கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய்விட்டீர்கள்; அருளை இழந்து
விட்டீர்கள்.
5 ஆனால் நாம் தூய ஆவியின் துணையால்
நம்பிக்கையின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவர்
ஆக்கப்படுவோம் என்னும் எதிர்நோக்கு நிறைவேறும் என ஆவலோடு
காத்திருக்கிறோம்.
6 கிறிஸ்து இயேசுவோடு இணைந்து
வாழ்வோர், விருத்தசேதனம் செய்து கொண்டாலும் செய்து
கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு எப்பயனும் இல்லை.
அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே
இன்றியமையாதது.
7 நீங்கள் நன்றாகத்தானே முன்னேறி வந்தீர்கள்!
அப்படியிருக்க உண்மைக்குக் கீழ்ப்படியாதபடி இப்போது
உங்களைத் தடுத்தவர் யார்?
8 இவ்வாறு செய்யத் தூண்டியவர்
உங்களை அழைத்த இறைவன் அல்ல.
9 சிறிதளவு புளிப்புமாவு,
பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கிறது. [1]
10
மாறுபட்ட கொள்கை எதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் என்னும்
உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எனக்குத் தந்துள்ளார்.
ஆனால் உங்கள் உள்ளத்தைக் குழப்புவோர் எவராய் இருந்தாலும்
அவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள்.
11 சகோதர சகோதரிகளே, விருத்தசேதனம் செய்துகொள்ள
வேண்டும் என அறிவிப்பதாய் இருந்தால் நான் ஏன் இன்னும்
துன்புறுத்தப்பட வேண்டும்? நான் அவ்வாறு அறிவித்தால்
சிலுவை ஒரு தடையாக இருக்க இடமில்லையே!
12 உங்கள்
உள்ளங்களில் குழப்பம் உண்டாக்குகிறவர்கள் தங்களை
அலிகளாகவே ஆக்கிக் கொள்ளட்டும்.
13 அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு
அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு
ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக்
கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய்
இருங்கள். [2]
14 "உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக"
என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும்
நிறைவு பெறுகிறது. [3]
15 ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை
நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்.
எச்சரிக்கை!
தூய ஆவியின் கனியும் ஊனியல்பின் செயல்களும்
16 எனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின்
தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின்
இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்.
17 ஊனியல்பின் இச்சை
தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம்
ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய்
உள்ளதால் நீங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய
முடிவதில்லை. [4]
18 நீங்கள் தூய ஆவியால்
வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய்
இருக்கமாட்டீர்கள்.
19 ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும்
தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை,
காமவெறி,
20 சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை,
சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி
மனப்பான்மை, பிரிவினை, பிளவு,
21 அழுக்காறு, குடிவெறி,
களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர்
இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று நான்
ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.
22 ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி,
அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை,
23
கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில்
திருச்சட்டத்திற்கு இடமில்லை.
24 கிறிஸ்து இயேசுவுக்கு
உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும்
இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.
[5]
25 தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம்.
எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.
26 வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர்
எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர்மீது ஒருவர்
பொறாமைப்படாமலும் இருப்போமாக!- குறிப்புகள்
[1] 5:9 - 1 கொரி 5:6.
[2] 5:13 - உரோ 6:15; 1 பேது 2:16.
[3] 5:14 - லேவி 19:18.
[4] 5:17 - உரோ 7:15-23; யாக் 4:1.
[5] 5:24 - கொலோ 3:5.