Home

திருவிவிலியம்

திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்

முன்னுரை | அதிகாரங்கள்

சூழலும் நோக்கமும்

பவுல் தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அப்போது இரண்டாம் முறையாகத் திமொத்தேயுவுக்குத் திருமுகம் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல்முறை போலல்லாமல் இம்முறை அவர் ஒரு சாதாரண குற்றவாளிபோல் நடத்தப்பட்டார் (1:16; 2:9; 4:13) என்றும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. இத்திருமுகத்தில் ஆசிரியர், பவுலின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல அறிவுரைகளைத் திமொத்தேயுவுக்கு வழங்குவதைக் காண்கின்றோம்.

பவுல் எபேசு சபையைக் கண்காணிக்குமாறு திமொத்தேயுவை ஏற்படுத்திய பின் (1:3) மாசிதோனியா சென்றார். மீண்டும் தாம் எபேசுக்கு வரப்போவதில்லை என உணர்ந்த அவர், தாம் ஆயராக நியமித்த திமொத்தேயுவுக்கு அவர்தம் கடமைகளை நினைவுறுத்துவதற்காக இத்திருமுகத்தை எழுதியதாகப் பலர் கருதுகின்றனர்.

உள்ளடக்கம்

இத்திருமுகத்தில் பவுலைக் குறித்த செய்திகள் பல உள்ளன. மன உறுதியுடன் இருத்தலே இத்திருமுகத்தின் மையக் கருத்தாக அமைகிறது. திமொத்தேயு தொடர்ந்து இயேசுவுக்குச் சான்று பகரவும், நற்செய்தி மற்றும் பழைய ஏற்பாட்டின் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், போதகர், நற்செய்தியாளர் என்னும் முறையில் தம் கடமைகளைச் செவ்வனே செய்யவும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறா; துன்பங்கள் நடுவிலும் எதிர்ப்புகள் நடுவிலும் முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டப் பணிக்கிறார். பயனற்ற வீண் விவாதங்களில் திமொத்தேயு ஈடுபடலாகாது என அவர் அறிவுறுத்துகிறார்.