1. முன்னுரை
கடவுள் தம் மகன் மூலமாக நம்மிடம் பேசியுள்ளார்
1 பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில்
இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,
2 இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்;
இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்;
இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.
3 கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும்,
அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர்,
தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்.
மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின்,
விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
2. கடவுளின் மகன் வானதூதரைவிட மேலானவர்
4 இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை
உரிமைப்பேறாகப் பெற்றார்.
அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார்.
5 ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது
"நீ என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்"
என்றும்,
"நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்"
என்றும் எப்போதாவது கூறியதுண்டா? [1]
6 மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது,
"கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக"
என்றார். [2]
7 வானதூதரைக் குறித்து அவர்
"தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்"
என்றார். [3]
8 தம் மகனைக் குறித்து,
"இறைவனே, என்றுமுளது உமது அரியணை; உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.
9 நீதியே உமது விருப்பம்; அநீதி உமக்கு வெறுப்பு; எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உம்மீது அருள்பொழிவு செய்து அரசத் தோழரினும் மேலாய் உயர்த்தினார்"
என்றார். [4]
10 மீண்டும்,
"ஆண்டவரே, நீர் தொடக்கத்தில் பூவுலகுக்கு அடித்தளம் இட்டீர். விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ!
11 அவையோ அழிந்துவிடும்; நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்;
12 போர்வையைப்போல் அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்; ஆடையைப்போல் அவற்றை மாற்றிவிடுவீர். நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது"
என்றார் அவர். [5]
13 மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது,
"நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்"
என்று கூறியதுண்டா? [6]
14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா?
மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத்
தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?- குறிப்புகள்
[1] 1:5 - திபா 2:7; 2 சாமு 7:14; 1 குறி 17:13.
[2] 1:6 - திபா 97:7.
[3] 1:7 - திபா 104:4.
[4] 1:8,9 - திபா 45:6,7.
[5] 1:10-12 - திபா 102:25-27.
[6] 1:13 - திபா 110:1.