ஏழு வாதைகள்
1 பின்பு பெரியதும் வியப்புக்குரியதுமான
மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்;
ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள்.
இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.
2 நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒன்றையும் கண்டேன்.
தொடர்ந்து, விலங்கின்மீதும் அதன் சிலைமீதும்
எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள்மீதும் வெற்றி பெற்றவர்கள்,
கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம்
கண்ணாடிக்கடல் அருகே நின்று கொண்டிருக்கக் கண்டேன்.
3 அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும்
ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்:
"கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. [1]
4 ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின." [2]
5 இதன் பின் விண்ணகத்தில் உள்ள கோவில்,
அதாவது சந்திப்புக் கூடாரம் திறக்கக் கண்டேன். [3]
6 அப்பொழுது ஏழு வாதைகளைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும்
கோவிலிலிருந்து வெளியே வந்தார்கள்;
அவர்கள் தூய்மையான, பளபளப்பான மெல்லிய ஆடையும்
மார்பில் பொன்பட்டையும் அணிந்திருந்தார்கள்.
7 அந்த நான்கு உயிர்களுள் ஒன்று
என்றென்றும் வாழும் கடவுளின் சீற்றத்தால் நிறைந்த
ஏழு பொன் கிண்ணங்களை அந்த ஏழு வான தூதர்களுக்கும் அளித்தது.
8 கடவுளின் மாட்சியும் வல்லமையும் கோவிலைப் புகையால் நிரப்பின.
அதனால் அந்த ஏழு தூதர்களும் கொண்டிருந்த ஏழு வாதைகளும் முடிவுறும்வரை
ஒருவரும் கோவிலுள் நுழைய முடியவில்லை. [4]
- குறிப்புகள்
[1] 15:3 - விப 15:1.
[2] 15:4 - எரே 10:7.
[3] 15:5 - விப 38:21.
[4] 15:8 - விப 40:34; 1 அர 8:10,11; 2 குறி 5:13,14; எசா 6:4; விப 9:10.