ஏழாவது முத்திரை
1 ஆட்டுக்குட்டி ஏழாவது முத்திரையை உடைத்தபொழுது
விண்ணகத்தில் ஏறத்தாழ அரைமணி நேரம் அமைதி நிலவியது.
4. ஏழு எக்காளங்கள்
2 பின் கடவுள்முன் நின்று கொண்டிருந்த ஏழு வானதூதர்களைக் கண்டேன்.
அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப்
பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார்.
அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது
இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு
அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது. [1]
4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து
வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது.
5 பிறகு அந்த வானதூதர் தூபக் கிண்ணத்தை எடுத்து,
பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி,
மண்ணுலகின்மீது வீசியெறிந்தார்.
உடனே இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின. [2]
முதல் நான்கு எக்காளங்கள்
6 அப்பொழுது ஏழு எக்காளங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும்
அவற்றை முழக்க ஆயத்தமானார்கள்.
7 முதல் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
உடனே இரத்தத்தோடு கலந்த கல்மழையும் நெருப்பும்
நிலத்தின்மீது வந்து விழுந்தன.
நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி எரிந்து போனது;
மரங்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தீக்கிரையானது;
பசும்புல் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டது. [3]
8 இரண்டாம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
உடனே தீப்பற்றியெரிந்த பெரிய மலைபோன்ற ஒன்று
கடலுக்குள் எறியப்பட்டது.
இதனால் கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாக மாறியது.
9 கடல்வாழ் உயிரினங்களுள் மூன்றில் ஒரு பகுதி மடிந்தது;
கப்பல்களுள் மூன்றில் ஒரு பகுதி அழிந்தது.
10 மூன்றாம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
உடனே தீவட்டிபோன்று எரிந்துகொண்டிருந்த பெரிய விண்மீன் ஒன்று
வானிலிருந்து பாய்ந்து வந்து ஆறுகளுள்
மூன்றில் ஒருபகுதியிலும் நீரூற்றுகளிலும் விழுந்தது. [4]
11 அந்த விண்மீனுக்கு 'எட்டி' என்பது பெயர்.
ஆகவே தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டிபோலக் கசப்பானது.
இவ்வாறு அந்தக் கசப்பான நீரைக் குடித்த மனிதர் பலர் இறந்தனர். [5]
12 நான்காம் வானதூதர் எக்காளம் முழக்கினார்.
உடனே கதிரவனின் மூன்றில் ஒரு பகுதியும்
நிலாவின் மூன்றில் ஒரு பகுதியும்
விண்மீன்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தாக்குண்டன.
இதனால் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி இருளடைந்தது;
பகலின் மூன்றில் ஒரு பகுதி ஒளி குன்றியது.
இரவுக்கும் அவ்வாறே ஆயிற்று. [6]
13 இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன்.
நடுவானில் பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று உரத்த குரலில்,
"மற்ற மூன்று வானதூதர்களும் எக்காளங்களை இதோ முழக்கவிருக்கிறார்கள்.
அந்தோ! உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும்! ஐயகோ!" என்று கத்தக் கேட்டேன்.- குறிப்புகள்
[1] 8:3 - விப 30:1,3; ஆமோ 9:1.
[2] 8:5 - விப 19:16; லேவி 16:12; எசே 10:2; திவெ 11:19; 16:18.
[3] 8:7 - விப 9:23-25; எசே 38:32.
[4] 8:10 - எசா 14:12.
[5] 8:11 - எசே 9:15.
[6] 8:12 - எசா 13:10; எசே 12:7; யோவே 2:10,31; 3:15.