சீடரின் காலடிகளைக் கழுவுதல்
1 பாஸ்கா விழா தொடங்கவிருந்தது.
தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது
என்பதை இயேசு அறிந்திருந்தார்.
உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர்
அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
2 இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை
சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது.
இரவுணவு வேளையில்,
3 தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும்
தாம் கடவுளிடமிருந்து வந்தது போல்
அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய்,
4 இயேசு பந்தியிலிருந்து எழுந்து,
தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு
ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.
5 பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச்
சீடர்களுடைய காலடிகளைக் கழுவி
இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
6 சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர்,
"ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?" என்று கேட்டார்.
7 இயேசு மறுமொழியாக,
"நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது;
பின்னரே புரிந்து கொள்வாய்"
என்றார்.
8 பேதுரு அவரிடம்,
"நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்" என்றார்.
இயேசு அவரைப் பார்த்து, "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால்
என்னோடு உனக்குப் பங்கு இல்லை"
என்றார்.
9 அப்போது சீமோன் பேதுரு,
"அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல,
என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்" என்றார்.
10 இயேசு அவரிடம்,
"குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும்.
அவர் தூய்மையாகிவிடுவார்.
நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள்.
ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை"
என்றார்.
11 தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது.
எனவேதான் "உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை"
என்றார்.
12 அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு
தம் மேலுடையை அணிந்துகொண்டு
மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது:
"நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?
13 நீங்கள் என்னைப் "போதகர்"
என்றும் "ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள்.
நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே.
நான் போதகர்தான், ஆண்டவர்தான்.
14 ஆகவே ஆண்டவரும் போதகருமான நான்
உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால்
நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
15 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு
நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.
[1]
16 பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல;
தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
[2]
17 இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.
18 உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை.
நான் தேர்ந்துகொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும்.
எனினும்,
"
என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்" என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.[3]
19 அது நிறைவேறும்போது,
'இருக்கிறவர் நானே' என்று நீங்கள் நம்புமாறு
இப்போதே, அது நிறைவேறுமுன்பே,
அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன்.
20 நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
[4]
இயேசுவும் அவரைக் காட்டிக் கொடுப்பவனும்
(மத் 26:20-25; மாற் 14:17-21; லூக் 22:21-23)
21 இப்படிச் சொன்னபின் இயேசு உள்ளம் கலங்கியவராய்,
"உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"
என்று திட்டவட்டமாகக் கூறினார்.
22 யாரைப் பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல்
சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.
23 இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புக் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார்.
அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார்.
24 சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி,
"யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்கேள்" என்றார்.
25 இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர்,
"ஆண்டவரே அவன் யார்?" என்று கேட்டார்.
26 இயேசு மறுமொழியாக,
"நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்"
எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச்
சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.
27 அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் [5]
சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.
இயேசு அவனிடம், "நீ செய்யவிருப்பதை விரைவில் செய்"
என்றார்.
28 இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப்
பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்து கொள்ளவில்லை.
29 பணப்பை யூதாசிடம் இருந்ததால்,
திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ
ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ
இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர்.
30 யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான்.
அது இரவு நேரம்.
புதிய கட்டளை
31 அவன் வெளியே போனபின் இயேசு,
"இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார்.
அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.
32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால்
கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்.
33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.
நீங்கள் என்னைத் தேடுவீர்கள்.
[6]
ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது.
இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.
34 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்'
என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
[7]
35 நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்"
என்றார்.
பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்
(மத் 26:31-35; மாற் 14:27-31; லூக் 22:31-34)
36 சீமோன் பேதுரு இயேசுவிடம்,
"ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?" என்று கேட்டார்.
இயேசு மறுமொழியாக,
"நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது;
பின்னரே என்னைப் பின்தொடர்வாய்"
என்றார்.
37 பேதுரு அவரிடம்,
"ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது?
உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றார்.
38 இயேசு அவரைப் பார்த்து,
"எனக்காக உயிரையும் கொடுப்பாயோ?
நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என
உறுதியாக உனக்குச் சொல்கிறேன்"
என்றார்.[8]- குறிப்புகள்
[1] 13:12-15 - லூக் 22:27; எபே 5:2; பிலி 2:5, 8.
[2] 13:16 - மத் 10:24; லூக் 6:40; . யோவா 15:20
[3] 13:18 - திபா 41:9.
[4] 13:20 - மத் 10:40; மாற் 9:37; லூக் 9:48; 10:16.
[5] 13:27 - லூக் 22:3.
[6] 13:33 - யோவா 7:34.
[7] 13:34 - மத் 19:19; லூக் 10:27; யோவா 3:23; 2 யோவா 5.
[8] 13:38 - மத் 26:31-35; மாற் 14:29-31.