துன்புற்ற தலைமைக் குரு
1 தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு,
பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக
மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்.
2 அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால்,
அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும்
பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார்.
3 அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல,
தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். [1]
4 மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை.
ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும். [2]
5 அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை.
"நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்" [5]
என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்.
6 இவ்வாறே மற்றோரிடத்தில்,
"மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே"
என்றும் கூறப்பட்டுள்ளது. [4]
7 அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில்,
தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி,
கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார்.
அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு,
கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். [5]
8 அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
9 அவர் நிறைவுள்ளவராகி,
தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
10 "மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு" என்று
கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.
கிறிஸ்தவ வாழ்வில் உறுதி
11 இதைப்பற்றிப் பேசுவதற்கு நிறைய உள்ளது; ஆனால் விளக்கம் கூறுவது அரிது.
ஏனெனில் உங்கள் அறிவு மழுங்கிப் போய்விட்டது.
12 இவ்வளவு காலத்திற்குள் ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டிய நீங்கள்
இன்னும் கடவுளுடைய வாய்மொழிகளின் அரிச்சுவடியையே
கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.
உங்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது பால்தான்; கெட்டியான உணவு அல்ல.
13 பால் குடிக்கும் நிலையில் உள்ளவர் எவரும் குழந்தையே.
நீதிநெறிபற்றிய படிப்பினையில் அவர் தேர்ச்சி அற்றவர். [6]
14 முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு.
அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப்
பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்.- குறிப்புகள்
[1] 5:3 - லேவி 9:7.
[2] 5:4 - விப 28:1.
[3] 5:5 - திபா 2:7.
[4] 5:6 - திபா 110:4.
[5] 5:7 - மத் 26:36-46; மாற் 14:32-42; லூக் 22:39-46.
[6] 5:12,13 - 1 கொரி 3:2.