1. முன்னுரை
வாழ்வு அளிக்கும் வாக்கு
1 தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்;
கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டுணர்ந்தோம். [1]
2 வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம்.
அதற்குச் சான்று பகர்கிறோம்.
தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான
அந்த 'நிலைவாழ்வு' பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். [2]
3 தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும்
நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு
நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
4 எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.
2. ஒளியும் இருளும்
ஒளியில் நடத்தல்
5 நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே:
கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை.
6 நாம் இருளில் நடந்து கொண்டு,
அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்;
உண்மைக்கேற்ப வாழாதவராவோம்.
7 மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால்,
ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்.
மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம்
எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.
பாவத்தை விட்டுவிடுதல்
8 ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால்
நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது.
9 மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால்
கடவுள் நம் பாவங்களை மன்னித்து,
குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.
ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர்.
10 நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம்.
அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.- குறிப்புகள்
[1] 1:1 - யோவா 1:1.
[2] 1:2 - யோவா 1:14.